பாலியற் கல்வி எனப்படுவது, பால் தன்மை, இனப்பெருக்கம், பாலுறவு, கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகும். நம்ம நாட்டில் இன்னமும் பாலியல் கல்வி தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு இல்லை.
பாலியல் கல்வி என்கிற வார்த்தை இப்போதெல்லாம் பரவலாக உச்சரிக்கப்படுகிறது. ஆனால், இன்னும் பள்ளிகளில் பாலியல் சார்ந்த விழிப்புணர்வைச் சொல்லித் தர தயங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
பாலியல் கல்வி என்பது ஏதோ கெட்ட விஷயம் அல்ல. பெண் குழந்தைகள் தங்கள் உடல் உறுப்புகளைப் பற்றியும், இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றியும், மாதவிடாய், கருவுறுதல் குறித்தும் தெளிவாக அறிந்துகொள்ளவும், ஆண் குழந்தைகள் தங்கள் இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றியும், பெண் குழந்தைகளின் பிரச்னைகளைப் பற்றியும் அறிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒரு விழிப்புணர்வுக் கல்வியாகும்.
Recommended: ஆண்கள் பூப்படைதல், வயதுக்கு வருதல் தொடர்பான அடிப்படையான விடையங்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
நம் உடல் மீது நமக்கு இருக்கும் உரிமைகளையும், அதில் அந்நியர்களைக் குறுக்கிடாமல் தவிர்ப்பது எப்படி என்பதையும், அவ்வாறு குறுக்கிடும் போது அவர்களை எதிர்கொள்வது எவ்வாறு என்றும் பாலியல் குறித்த அறிவியல் பூர்வமான தகவல்களை வளர் இளம் பருவத்தினர் முறையாக அறிந்து கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் தவறான நபர்கள் மூலமாகவும், இணையம், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் மூலமும் தேவையற்ற, வேண்டாத தகவல்களைப் பெற்று, அதன் மூலம் தவறாக வழிகாட்டப்படுவார்கள் என்பதால் இப்போது இந்தக் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேச வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
பள்ளிப் பருவத்திலேயே ஏன் சொல்லித்தர வேண்டும் என்றால், இப்போதெல்லாம் சிறு குழந்தைகளிடம் அத்துமீறுபவர்கள் பெருகியிருக்கிறார்கள். இவர்கள் போன்றவர்கள் முன்பும் இருந்திருக்கிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வெளியில் சொல்ல முடிவதில்லை என்பதோடு சொல்லவும் தெரிவதில்லை என்பதுதான் உண்மை. எனவே இந்த விழிப்புணர்வு இப்போதே ஏற்படுத்தப்படுவது மிகவும் அவசியம். பின்னாளில் அடிமனதில் படியும் கசடுகளும் கசப்புகளும் தவிர்க்கப்பட இது ஒன்றுதான் வழி.
நான் ஏழாம் வகுப்பில் படிக்கும் போது ஆண், பெண் இனப்பெருக்க உள்ளுறுப்புகள் குறித்த வரைபடத்துடன் பாடம் இருந்தது. ஆனால், எங்கள் ஆசிரியர் அதை நடத்தவேயில்லை. இன்னொரு வகுப்பு ஆசிரியையோ அந்தப் பக்கத்தைத் திருப்பிக்கூடப் பார்க்கக் கூடாது என்று கண்டித்தார். பத்தாம் வகுப்பில் இனப்பெருக்க உறுப்புகள் குறித்து வரைபடங்களுடன் அறிவியல் பாடம் இருந்தது. எங்கள் அறிவியல் ஆசிரியை ஆண் மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு மாணவிகளுக்கு மட்டும் பட்டும் படாமல் வகுப்பெடுத்தார். அதில் அவருக்குச் சீக்கிரம் அந்த நேரத்தைக் கடத்த வேண்டும் என்கிற பதட்டம்தான் இருந்தது. இறுதியாக இந்தக் கேள்விகள் பரீட்சையில் வந்தால் தவிர்த்து விடுமாறு அறிவுறுத்தினார்.
ஆண் மாணவர்களுக்கு வேறொரு வகுப்புக்கு அறிவியல் பாடம் நடத்தும் ஆண் ஆசிரியர் பெண் மாணவர்களை வெளியே அனுப்பி விட்டு நடத்தினார். பாலியல் குறித்த விழிப்புணர்வு அந்தப் பருவத்தில் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் நாம் இன்னும் இருக்கிறோம். பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு தன்னார்வ நிறுவனத்தில் இருந்து வந்து பெண்கள் மாதவிடாய் சுழற்சி, அந்தச் சமயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள் ஆகியவற்றைச் சொன்னதோடு, வாழைப்பழத்தில் காண்டம் மாட்டி குடும்பக் கட்டுப்பாடு குறித்து ஒருவர் விளக்க ஆரம்பிக்கும் போது ஆசிரியர்கள் இருபாலரும் நெளிய ஆரம்பித்தனர்.
மாணவர்களிடையே கிசுகிசுவென்ற பேச்சோடு மெல்லிய சிரிப்பும் எழவே அத்துடன் நிகழ்ச்சியை முடிக்கச் சொல்லி தலைமை ஆசிரியை சொல்லிவிட்டார். அன்று அறிவியல் பூர்வமான விளக்கங்களை எளிதாக எடுத்துரைக்க யாரும் முன்வரவில்லை. எந்த ஒரு விஷயமும் பொத்திப் பொத்தி வைப்பதால் அதைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும்.
முதலில் பாலியல் கல்வி என்றால் என்னவென்று பெரியவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வெறும் ஆண்-பெண் புணர்ச்சி குறித்துச் சொல்லித் தரப்படுவதல்ல பாலியல் கல்வி. இதனால் வளர் இளம் பருவத்தினர் தவறான பாதைக்குச் சென்றுவிடுவார்கள் என்றோ, பாலியல் உறவுக்குத் தூண்டப்படுவார்கள் என்றோ தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது.
பாலினத் தன்மை, பாலின உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், அவற்றை சுகாதாரமாக வைத்திருப்பது குறித்து, இனப்பெருக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுய இன்பம், உரிய வயதுக்கு முன்னரே கருவுறுதல், இனப்பெருக்கத்தோடு தொடர்புடைய சமூக மற்றும் பொருளாதாரப் பொறுப்பு, பாலின சமத்துவம், பால்புதுமையினர் எதிர்கொள்ளும் சவால்கள், மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், கருத்தடையின் தேவை, அவற்றை உபயோகிக்கும் முறை, எய்ட்ஸ் முதலானவை குறித்துத் தொடர்ச்சியாக, வகுப்புக்கு ஏற்றவாறு அறிவியல்பூர்வமாகப் பாலியல் கல்விக்கான பாடத்திட்டத்தை அமைத்து விளக்குதல் நிச்சயம் நன்மையே பயக்கும்.
உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் 16 முதல் 19 வரையிலான வயதுடையவர்களில் 45 சதவீதத்தினர் திருமணத்திற்கு முன்பாக உடலுறவில் ஈடுபடுவதாக கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் அது பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டுதலில் தான் இருக்கிறது.
Recommended: வயது வந்தவர்களுக்கான அடிப்படை பாலியல் கல்வி - Sex Education in Tamil(18+)
Comments
Post a Comment