இஸ்லாம் மார்க்கத்தின் ஓரினச்சேர்க்கை தொடர்பான பார்வை, அதன் ஆழமான, பரந்த நம்பிக்கைகளின் காரணமாகவும், வேறுபட்ட பல பொருள் விளக்கங்களின் காரணமாகவும் மிகவும் குழப்பமானது. ஆனால் Quran (திருக்குர்ஆன்) ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையினால் உறவை நெறிப்படுத்தியது போல ஆணுக்கும் ஆணுக்கும் இடையிலான உறவையும், பெண்ணுக்கும் பெண்ணுக்குமான உறவையும், திருநங்கைகளுடனான உறவையும் நெறிப்படுத்தவில்லை. அதே நேரம் தன்னினச்சேர்க்கையை முழுமையாக தடை செய்யவும் இல்லை.
முறையற்ற விதத்தில் ஆண்களுடன் உடலுறவு கொண்டவர்கள் கூட பிரார்த்தனை செய்து, திருந்தி வேண்டிக் கொண்டால் கடவுள் மன்னிப்பான் என்கிறது.
நமது சமூகத்தில் தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ள அநேகமான முஸ்லிம் ஆண்கள் தமது ஆசைகளை மறைத்தே வாழ்கிறார்கள். தொழுகை நேரங்களில், ரமழான்(Ramzan) காலத்தில் நோன்பு நோக்கும் நேரங்களில் எல்லாம் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள். ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் எண்ணம் ஏற்படாத வகையில் குடும்பத்தாருடன் அந்தக் காலத்தை செலவு செய்கிறார்கள்.
இஸ்லாத்தில் மாத்திரம் அல்ல, கிறிஸ்தவ, யூத மதங்கள், இந்து மதங்களில் கூட தன்னினச்சேர்க்கையை தடை செய்யும் விதத்திலேயே கருத்துக்கள் உள்ளன. ஆனால் அந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் காலத்திற்கு ஏற்றால் போல தம்மை மாற்றிக் கொண்டு வாழும் போது, முஸ்லிம் ஆண்களும் தமது உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளித்து, மாற வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். ஏன் என்றால், படைத்தவனுக்குத் தெரியும்! பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படாதவனை அவன், கஷ்டப்பட்டு பெண்களுடன் குடும்ப நடாத்த வற்புறுத்த மாட்டான்.
ஆகவே முஸ்லிம் ஆண்கள் கூட எந்தவொரு தயக்கமும் இல்லாமல், நெறிப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடலாம். தப்பு எல்லா இடத்திலயும் தான் இருக்கும். ஆனால் உங்க டிசைனே இப்படித்தான் என்று இருக்கும் போது, மத நம்பிக்கைகளை வைத்து உங்கள் உணர்வுகளை அடக்கி வைக்க நினைப்பது நியாயமா? தப்பு எது? சரி எது? என்று சுயமாக உணர்ந்து கொள்ளத்தான், ஆண்டவன் நமக்கு பகுத்தறிவைக் கொடுத்துள்ளான்.
விஞ்ஞான ரீதியாகப் பார்த்தோம் என்றால் Gay, Lesbian, Straight, Transgender இவை எல்லாமே இயற்கையின் தேர்வு தான். எல்லாத்தையும் படைத்த கடவுள் தான் விஞ்ஞானத்தையும் படைத்தான். ஆகவே இஸ்லாமிய அறிஞர்கள் போல முரண்டு பிடிப்பது தேவையற்றது.
ஆரம்பத்தில் சற்று தயக்கமாக இருக்கத்தான் செய்யும். தற்கொலை செய்யும் எண்ணம் கூட ஏற்படலாம். ஆனால் இவையெல்லாம் தேவையற்ற பயமாகும். ஓரினச்சேர்க்கை தொடர்பான உங்கள் தேடலின் ஆழத்தை அதிகரிக்கும் போது உங்களை நீங்களே புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். உங்களை நீங்களே புரிந்து கொள்ளும் வரை, உங்கள் உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
இஸ்லாமிய அறிஞர்கள்(Islamic scholars) தமது இறை நம்பிக்கையுடன் ஓரினச்சேர்க்கை ஒத்துப்போகவில்லை என இறைதூதர் லூத்தின் கதையை ஆதாரமாக சமர்ப்பிக்கிறார்கள். ஆனால் அதில் குறிப்பிட்ட ஒரு நகரத்தில் இருந்த ஆண்களுக்கிடையேயான முறைகேடான தன்னினச்சேர்கையையே குர்ஆனில் கண்டித்திருந்ததைக் காண முடிந்தது.
ஒரினச்சேர்க்கை முழுமையாக தவறான ஒன்றாக இருந்திருந்தால் திருக்குர்ஆன் Lesbians (லெஸ்பியன்ஸ்), திருநங்கைகள் பற்றி கண்டித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் திருக்குரானில் இல்லை.
இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம் ஆண்கள் தயங்காது, முறையான முறையில்(ஒருவனுக்கு ஒருத்தன் என்ற) தன்னினச்சேர்க்கையில் ஈடுபடலாம். இஸ்லாம் ஓரினச்சேர்க்கையை தடை செய்ய விரும்பவில்லை, அதனை நெறிப்படுத்தவே விரும்பியது.
திருமணம் ஆன ஆண்கள், மனைவி இருக்க இன்னொரு ஆணுடன் உடலுறவு கொள்வதை கண்டிக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தன் என்று வாழாமல், விபச்சாரிகள் போல கண்டமேனிக்கு உடலுறவு கொள்வதை, ஆண்களை கற்பழிப்பதை கண்டிக்கிறது. அவற்றை குற்றமாக பார்க்கிறது.அப்படி ஒரு சம்பவத்தைத்தான் இறைதூதர் லூத்தின் கதை இந்த உலகத்திற்குச் சொல்கிறது.
இஸ்லாம் மார்க்கமானது செக்ஸ் வாழ்க்கையை மாத்திரம் நெறிப்படுத்த உருவானது அல்ல. செக்ஸ் அதன் ஒரு பகுதிதான். முஸ்லிமாக, நீங்கள் உங்கள் இறை நம்பிக்கையை பின்பற்றிக் கொண்டு காலத்திற்கு ஏற்றால் போல சில அடிப்படை விடையங்களில் மாற்றங்களைக் கொண்டு வருவதில் தவிறில்லை.
ஓரினச்சேர்க்கையை குற்றமாக பார்க்கப்படுவதற்கான ஆதாரமாக திருக்குர்ஆனில் சொல்லப்படும் இறைதூதர் நபி லூத் அலைஹிஸ்ஸலாமின் கதை.
இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் சகோதரனின் மகன் லூத் அலைஹி வஸ்ஸலாம் அவர்கனை பாலஸ்தீன நாட்டின் கிழக்குப் பகுதிக்கு அல்லாஹ் நபியாக அனுப்பினான். அதில் சதோம் என்பது முக்கியமான நகரமாகும். ஓரின புணர்ச்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த தன் சமுதாயத்தினரிடம் அந்த மானக்கேடான செயலை விட்டு விடுமாறு லூத் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் அச்சமுகத்தினர் அத்தீயசெயலை மிகவும் பகிரங்கமாக செய்து வந்தனர். இதைப்பற்றி குர்ஆன் கூறுகிறது.
ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்களின் தந்தைக்கு இப்ராஹிம், நாஹூர் (Nahor), ஹரன் (Haran) என்று மூன்று மக்கள் இருந்தனர். ஹரனுடைய மகன்தான் ஹஸ்ரத் நபி லூத் (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்கள் ஆவர். எனவே இவர்கள் ஹஸ்ரத் இப்ராஹிம் நபியின் சகோதரரின் மகன் முறையானவர்கள் ஆவார்.
ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை நாட்டை விட்டு வெளியேறியபோது ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும், ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் கொள்கையை ஏற்று அவர்களுடன் வெளியேறினார்கள்.
ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஸதூம் நகருக்கு (city of Sodom) சென்றார்கள். அல்லாஹ் அவர்களை அம்மக்களுக்கு நபியாக அனுப்பி வைத்தான்.
ஸதூம் நகர் ஜோர்தான் சாக்கடலின் மேற்கு புரத்தில் அமைந்துள்ளது. முதஃபகாத் என்பது ஜோர்தான் நதிக்கு அருகிலுள்ள ஸதூம் (Sodom), கொமோரா (Gomorrah), ஆதாம், ஸபோயின், ஸுனூக்கு என்னும் ஐந்து நகரங்களை கொண்ட நாடாகும்.
அந்த காலத்தில் ஸதூம் மிக முக்கியமான ஒரு நகரமாக இருந்தது. அங்கு ஹஸ்ரத் நபி இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறியபடி, இறைவன் 'ஒருவன்' என்ற ஓரிறை கொள்கையை பரப்பப் ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் சென்றார்கள்.
அங்கு வாழ்ந்துவந்த மக்கள் விவரிப்பிற்கும் அப்பாற்பட்ட ஒழுக்கங் கெட்டவர்கள். மகா கொடியவர்கள். விலங்குகளை விடக் கீழானவர்களாக இருந்தனர். பிரயாணிகளை வழிமறித்து கொள்ளையடிப்பது' அவர்களின் அடிப்படைத் தொழில்.
அதற்கு முன் மனித சமூகத்தில் யாருமே செய்யாத புதியதொரு பாவச் செயலை அவர்கள் செய்தனர். அதுதான் ஆணோடு ஆண் உறவு கொள்ளும் ஓரினச் சேர்க்கை ஆகும். அதையும் கேளிக்கை விடுதிகளில், மக்கள் கூடும் பொது இடங்களில் என்று பலர் பார்க்குமளவில், எத்தகைய வெட்கமுமின்றி செய்தனர். தொடர்ந்து செய்து அது அவர்களுக்கு மிக பழகிப் போய்விட்டது. இயல்பாகிவிட்டது. அவமானம் என்றொரு வார்த்தையே அவர்களது மொழியில் இல்லை என்றானது.
ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸ்லாம்) இதை பார்த்து கொதித்து எழுந்தார்கள். "என்ன கொடுமை இது? படைப்பினங்களிலேயே இதற்கு முன் எவரும் செய்யாத ஒரு பாவத்தை புரிகிறீர்கள். உங்களுக்கு மனைவிகளாக அமைய பெண்களை இறைவன் படைத்திருக்க, ஆண்கள் ஆண்களுடன் காமம் கொள்கிறீர்களே? எல்லை மீறும் பாவம் புரியும் மக்களாய் இருக்கிறீர்கள் நீங்கள்" என்று சொல்லிப் பார்த்தார்கள். விவரித்துப் பார்த்தார்கள். கதறிப் பார்த்தார்கள். இறைவனின் தண்டனையைச் சொல்லி பயமுறுத்தியும் பார்த்தார்கள். ம்ஹும்! எதுவும் அவர்கள் காதில் விழவில்லை.
'இதோ வந்துவிட்டார் ஒழுக்க சீலர்' என்று கேலியும், கிண்டலும் தான் செய்தார்களே தவிர ஒருவரும் கேட்டு திருந்தி நடக்கவில்லை.
"நீர் உண்மையானவர் என்றால் உம் இறைவனின் தண்டனையை எங்கள் மீது கொண்டு வாரும் பார்ப்போம்" என்று அகங்காரத்தோடு கூறினார்கள் அந்த மட மக்கள்.
ஹஸ்ரத் லூத் நபி (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்கள், “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்கள். இறுதியில் ஒருநாள் இறைவன், நபி லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் துவாவை எற்றுக்கொண்டான்.
இறைவன் மூன்று வானவர்களை அனுப்பி வைத்தான். அந்த மலக்குகள் இறைவனின் கட்டளைப்படி இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்களின் வீட்டிற்கு சென்று, முதல் மனைவி சாராவுக்கு மகன் பிறக்கப்போகும் நற்செய்தியை கூறினார்கள்.
மேலும் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம், ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) இருக்கும் இடத்திற்கு சென்று, அந்த ஊரை அழிக்க அல்லாஹ்விடம் இருந்து உத்தரவு வந்துள்ளது எனவும் கூறினார்கள்.
இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அங்கு லூத் இருக்கிறார்களே என்று கேட்டார்கள். அதற்கு அந்த மலக்குகள் “அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் அவரையும், அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றுவோம், அவருடைய மனைவியை தவிர” என்றார்கள்.
இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்), லூத் சமூகத்தினருக்காக மிகவும் வாதாடினார்கள். “கண்டிப்பாக ஒரு நாள் திருந்துவார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வார்கள்” என்றும் கூறினார்கள்.
“இப்றாஹீமே! (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில் உம்முடைய இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்துவிட்டது. மேலும், அவர்களுக்குத் தவிர்க்க முடியாத வேதனை நிச்சயமாக வரக்கூடியதேயாகும்" என்று அம்மலக்குகள் கூறினார்கள்.
மேலும் அங்கு எத்தனை பேர் இறை நம்பிக்கையாளர்கள் இருப்பார்கள்? என்று மலக்குமார்கள் கேட்டார்கள். அதற்கு இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) 300 பேர் என்றார்கள். இல்லை... 150 பேர் என்றார்கள். இல்லை.... 40 பேர் என்றார்கள். ? இல்லை.....14 பேர் என்றார்கள்? இல்லை....ஒருவர் கூட இறை நம்பிக்கை கொள்ளவில்லை என்றார்கள்.
இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் வந்த அந்த மலக்குமார்கள் மூன்று பேரும் ஹஸ்ரத் ஜிப்ரீல், ஹஸ்ரத் மீக்காயீல், ஹஸ்ரத் இஸ்ராபீல் ஆகியோர் ஆவார்கள்.
மலக்குமார்கள், இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) வீட்டை விட்டு ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இருக்கும் நகரத்திற்கு மதியம் வந்தார்கள். அங்கு ஸதூம் ஆற்றை கடக்கும் போது, ஹஸ்ரத் லூத்தின் மகள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு இரண்டு பெண்மக்கள் இருந்தனர். மூத்தவள் பெயர் ரிதா (Ridha), இளையவள் பெயர் ஜஹ்ரதா (Zaghrata)
மலக்குமார்கள் அந்த பெண்ணிடம் இங்கு தங்குவதற்கு ஏதாவது இடம் உண்டா என்று கேட்டார்கள்? அதற்கு அந்த பெண் இங்கேயே இருங்கள். நான் வரும் வரை ஊருக்குள் நுழைய வேண்டாம் என்று கூறி வேகமாக சென்றார். ஆண்களை மோகம் கொள்ளும் தம் ஊர் மக்களை பற்றிய பயத்தினால் அவர் அவ்வாறு செய்தார். வேகமாக தந்தை ஹஸ்ரத் லூத்திடம் சென்று “நாம் ஒரு போதும் பாத்திராத அழகான இளைஞர்களை கண்டேன்” என நடந்த விபரத்தைக் கூறினார்.
மேலும் இந்த ஊர் மக்களிடம் அழைத்து வரவேண்டாம். இந்த கெட்டவர்களிடம் ஏற்கனவே இவர்கள் உங்கள் வீட்டிற்கு யாராகிலும் ஆண் விருந்தாளிகள் வந்தார்களா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அப்பெண் கூறினார்.
ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஸதூம் நுழைவாயிலுக்கு சென்று அவர்களை சந்தித்தார்கள். (நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக; இது நெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார். (அல் குர்ஆன் 11:77)
வந்திருப்பவர்கள் மலக்குகள் என்று ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு தெரியாது. அவர்கள் சந்தித்த நேரம் சூரியன் மறையும் நேரம் என்பதால், இருள் சூழும் நேரமாக இருந்ததால் யாரும் பார்க்காமல் வீட்டிற்கு கொண்டு போய் சேர்த்தார்கள். ஹஸ்ரத் லூத்தின் குடும்பத்தாரை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் ஹஸ்ரத் லூத்தின் மனைவியோ வெளியே சென்று தம் ஜனங்களிடம் இந்த விசயத்தை தெரிவித்துவிட்டாள்.
ஹஸ்ரத் லூத்தின் மனைவி ஜனங்களிடம் தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர் பற்றியும் இவ்வளவு அழகான இளைஞர்களை தான் இதுவரை பார்த்தே இல்லை என்றும் கூறினாள். உடனே, அவளுடைய சமூகத்தார் அவளுடைய வீட்டை நோக்கி விரைந்தோடி வந்து முற்றுகையிட்டனர். அவர்களை கண்ட ஹஸ்ரத் லூத் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மிகவும் வெட்கப்பட்டார்கள். வேதனை அடைந்தார்கள்.
ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) வந்தவர்களை நோக்கி, இவர்கள் என் விருந்தினர்கள். ஆகவே அவர்கள் முன் என்னை கேவலப்படுத்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் என்றார்கள். அதற்கு அவர்கள் “உலக மக்களை பற்றியெல்லாம் பேசுவதை விட்டும் உம்மை நாங்கள் தடுக்கவில்லையா? என்று கேட்டார்கள்.
மேலும் ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) "இதோ என்னுடைய பெண்மக்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று கருதினால் இவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்” என்று சொன்னார்கள்.
அதற்கு அக்கொடிய மக்கள் “நாங்கள் விரும்புவது என்ன என்பதை நீர் அறிவீர்” என்று கூறினார்கள்.
அந்த கொடிய அரக்கர்களின் வன்முறைக்கு மத்தியில் ஹஸ்ரத் லூத் நபியவர்கள் செய்வதறியாது நின்றனர். எப்படியாவது தம் விருந்தினர்களை இக்கொடியவர்களின் தீங்கில் இருந்து பாதுக்காக்க வேண்டும் என்று ஆதங்கத்தில் கவலையுடன் இருந்தனர்.
அப்போது விருந்தினராக வந்த வானவர்கள் ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் “மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர. உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற் காலையாகும" என்று கூறினார்கள்.
ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மனைவியைத் தவிர, அவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் இரவோடு, இரவாக திரும்பிப் பாராமல் ஊரைவிட்டு வெளியேறுமாறு இறைவனின் வானவர்கள் கூறினார்கள். அவ்வாறே ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) செய்தார்கள்.
மறுநாள் அதிகாலை; இறைவன் அவ்வூரை தோசையை போல் தலைகீழாக திருப்பி போட்டான். சுடப்பட்ட களிமண் கற்கள் வானிலிருந்து அம்மக்கள் மீது மழையாய்ப் பொழிந்தன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. ஹஸ்ரத் லூத் நபியின் சமூகத்தார் அழிந்தனர். அவர்களின் மனைவியும் அழிந்தாள்.
ஸதூம் நகர அழிவிற்கு பின்னர் ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீண்டும் ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் வந்தனர். வந்து நடந்ததை கூறும் முன்னர் ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஏற்கனவே அங்கு நடந்ததை அறிந்திருப்பது கண்டு ஆச்சர்யம் அடைந்தார்கள்.
பின்னர் தம் மறைவு வரை அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்த வண்ணம் இருந்தார்கள். ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்களின் புனித அடக்கஸ்தலம் தற்போதைய பாலஸ்தீன் நாட்டில் பனி நாயிம் என்னும் இடத்தில் அமையப்பெற்றுள்ளது. அதனுடன் சேர்ந்து ஒரு பள்ளிவாசலும் காணப்படுகிறது.
ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) பற்றி வந்த அல்குர்ஆன் வசனங்கள்
29:28. மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.
29:29. நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்” என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: “நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக” என்பது தவிர வேறு எதுவுமில்லை.
27:56. அதற்கவருடைய சமுதாயத்தவர் (தம் இனத்தாரிடம்) “லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரைவிட்டு நீங்கள் வெளியேற்றி விடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகவும் பரிசுத்தமான மனிதர்களே!” என்று (பரிகாசமாகக்) கூறினார்களே தவிர வேறொரு பதிலும் அவர்களிடமில்லை.
29:30. அப்போது அவர்: “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
29:31. நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள்.
29:32. “நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்றாஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.
29:33. இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் “நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்” என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.
29:34. நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது, இவர்கள் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக, வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.
29:35. (அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம்.
வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக; இது நெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார்.
11:78. அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) “என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசுத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.
11:79. (அதற்கு) அவர்கள் “உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்” என்று கூறினார்கள்.
11:80. அதற்கு அவர் “உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே” என்று (விசனத்துடன்) கூறினார்.
11:81. (விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்: “மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?”
11:82. எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்.
11:83. அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன; (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை.
7:80. மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?”
7:81. “மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.”
7:82. நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.
7:83. எனவே, நாம் அவரையும், அவருடைய மனைவியைத்தவிர, அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக பின் தங்கி விட்டாள்.
15:58. காரியமென்ன?” என்று (இப்றாஹீம்) கேட்டார் அதற்கவர்கள், “குற்றவாளிகளான ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.
15:59. “லூத்தின் கிளையாரைத் தவிர, அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்.
15:60. ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர - நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்” என்று (வானவர்கள்) கூறினார்கள்.
15:61. (இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது.
15:62. (அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்” என்று (லூத்) சொன்னார்,
15:63. (அதற்கு அவர்கள்,) “அல்ல, (உம் கூட்டதாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித்தார்களோ, அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்;
15:64. (உறுதியாக நிகழவிருக்கும்) உண்மையையே உம்மிடம் நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாகவே இருக்கிறோம்.
15:65. ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.
15:66. மேலும், “இவர்கள் யாவரும் அதிகாலையிலேயே நிச்சயமாக வேரறுக்கப்பட்டு விடுவார்கள் (என்னும்) அக்காரியத்தையும் நாம் முடிவாக அவருக்கு அறிவித்தோம்”.
15:67. (லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்.
15:68. (லூத் வந்தவர்களை நோக்கி:) “நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;”
15:69. “அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்” என்றும் கூறினார்.
15:70. அதற்கவர்கள், “உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.
15:71. அதற்கவர், “இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்” என்று கூறினார்.
15:72. (நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.
54:37. அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள்; ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். “என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்” (என்றும் கூறினோம்).
15:73. ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது.
15:74. பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்.
15:75. நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Keywords: முஸ்லிம் ஆண்கள் தன்னினச்சேர்க்கையை குற்றமாக பார்க்கலாமா? முஸ்லிம் ஆண்கள் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளதா? முஸ்லிம் ஆண்கள் ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? Gay Sex, Same Sex, Bisexual, LGBT, Quran
Comments
Post a Comment