உடல் சுகாதாரத்தை மேம்படுத்துவதைப் பொறுத்தவரையில் உள்ளாடை சுத்தம் என்பது இன்றியமையாதது ஆகும். ஆண்களுக்கு அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படும் பல அரிப்புகளுக்கு மிக முக்கிய காரணமாக இந்த உள்ளாடை சுத்தம் அமைகிறது.
"ஜட்டி துவைப்பது எப்படி" என்னும் அரிய கேள்விக்கான விளக்கமான இந்த விழிப்புணர்வு பதிவை படிப்பதன் மூலம் ஆண்களால் சுயமாகவே தமது ஜட்டிகளை துவைத்து அணிய பழக முடியும். ஏழு கழுதை வயசான எங்களுக்கு ஜட்டி துவைக்க தெரியாதா என்று கேட்பவர்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம், இது ஆறு கழுதை வயதிற்கு இணையான மற்றும் அதற்கு கீழ் வயதுள்ளோருக்கான பதிவாகும்.
வயது வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் ஜட்டி என்பது அவங்க பொண்டாட்டி மாதிரி, இருந்தாலும் கஷ்டம் இல்லாட்டாலும் கஷ்டம். அதை சுத்தமாக வைத்து கொள்ளாதவர்கள் படும் அவஸ்தையை நான் சொல்லி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
எவ்வாறு ஜட்டியின் தூய்மையை பராமரிப்பது?
ஜட்டியை துவைக்க தண்ணீரில் நனைக்க முன்னர், ஜட்டியின் உள்பக்கத்தை வெளியே எடுக்கவும். ஜட்டியின் வெளிப்பக்கத்தை விட உள்பக்கமே நமது உடலுடனும் அந்தரங்க பகுதிகளுடனும் ஒட்டி உறவாடுபவை. ஆகவே அந்தப் பக்கத்தையே துவைக்கும் போது நன்றாக அலச வேண்டும்.
வெள்ளை நிற ஜட்டிகளை தனியாக துவைக்க வேண்டும். ஏனைய நிற ஆடைகளுடன் துவைத்தால் அல்லது ஊறப் போட்டால் அவற்றின் நிறம் வெள்ளை நிற ஜட்டியில் ஊறலாம்.
ஆண்கள் அன்றன்று அணிந்த ஜட்டிகளையும் பனியன்களையும் அன்றிரவே துவைத்து காயப் போடுவது சிறந்தது. கறை படிந்த ஜட்டிகளை உடனேயே கழுவாவிட்டால், அந்த கறைகள் ஜட்டியில் நிரந்தரமாகலாம்.
ஜட்டியில் ஏற்பட்ட விந்துக் கறைகள், சிறுநீர்க் கறைகளை துவைக்கும் போது தனியாக கவனிக்கவும். ஜட்டிக்கும் Bleaching செய்ய வேண்டாம். வெளிற்றிகள்(Bleaching Agents) பயன்படுத்தி துவைத்தால், அந்த ஜட்டியை அணியும் போது உங்கள் அந்தரங்கப் பகுதியில் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
1. ஜட்டியை சோப்பு போட்டு துவைப்பதாக இருந்தால் உடலுக்குப் போடும் சோப்பை பயன்படுத்த வேண்டாம். அது ஜட்டியின் மென்மையை பாதிக்கும். சலவைத் தூள் பயன்படுத்துவதாக இருந்தால் மிகவும் சிறிதளவை மாத்திரம் பயன்படுத்தவும்.
2. ஜட்டியை அதிகம் சூடான வெந்நீரில் துவைத்தல் கூடாது. அப்படி துவைப்பின் அது Pills(Small, Firm balls of Lint) என்னும் மெல்லிய மொட்டுக்கள் போன்ற முடிச்சுகளை துணியின் பரப்பில் ஏற்படுத்திவிடும். சூடான நீரில் ஆடைகளை துவைப்பது Fabric Pilling க்கு நேரடி காரணமாக அமையாவிட்டாலும், அவ்வாறான நிலைமை ஏற்படுவதை அது சுலபமாக்கி விடும்.
Note: Lint Remover பயன்படுத்தி அவற்றை நீக்கலாம்.
3. ஜட்டியில் உள்ள கிருமிகளை அழிக்க மிதமான வெப்பத்திற்கு கீழ் உள்ள தண்ணீரில் சிறிது டெட்டால் சேர்த்து ஜட்டியை சிறிது நேரம் மட்டும் ஊறவைத்து பின் துவைக்கவும்.
(இங்கு கிருமிகளாக அந்தரங்கப் பேன், மூட்டைப்பூச்சி, அரிப்பு சம்பந்தப்பட்ட Bacteria போன்றவற்றை கருதலாம்.)
4. ஜட்டியை வெகு நேரம் ஊறவைப்பதை தவிர்க்கவும், இதனால் ஜட்டியில் துர்நாற்றம் அதிகரிக்க மற்றும் விரைவில் கிழிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
5. ஜட்டியை கல்லில் வைத்து குழாய் போன்று உருட்டியபடி அழுத்தி தேய்த்தல் நல்லது, இது ஜட்டியில் உள்ள அழுக்கை முழுமையாக நீக்கி விடும், இந்த முறை ஜட்டியை கசக்கி தேய்த்தலை விட நல்லது, மேலும் இதே முறையை நீங்கள் பனியனுக்கும் செய்யலாம்.
6. எக்காரணம் கொண்டும் ஜட்டியை பிரஷ் வைத்து தேய்க்க வேண்டாம். இதனால் ஜட்டியின் மென்மை குறைந்துவிடும். ஜட்டியில் சீக்கிரம் ஓட்டை விழுவதற்கான வாய்ப்பு அதிகரித்து விடும்.
7. இலாஸ்டிக் பழுதடைந்த ஜட்டியை துவைத்து அணிய வேண்டாம். அவற்றை தூர எறிதலே நன்று. கிழிந்த ஜட்டிகளை ஆண்கள் வீட்டில் இருக்கும் போது அணிய, குளிக்கும் போது அணிய பயன்படுத்தலாம்.
8. ஜட்டியில் கறை போக சிறிது எழுமிச்சை சாறுவிட்ட நீரை பயன்படுத்தி ஊற வைத்து துவையுங்கள்.
9. ஜட்டியை உட்புறமாக திருப்பி துவைத்தாலே நன்று. காய போடும்போதும் உட்புறம் வெளியில் இருக்குமாறு காய போடுங்கள்.
10. ஜட்டியை துவைத்த பின் அதனை நன்கு பிழிந்து உதறி காய போட வேண்டும், இப்படி செய்யாவிடில் ஜட்டி அதிக மொர மொரப்புடன் அணிவதற்கு சிரமமாக இருக்கும். அதே நேரம் அதிக வெயிலிலும் காயப் போடக் கூடாது. அது ஜட்டியை பப்படம் போல் ஆக்கி விடும். சற்று நிழலான இடத்தில் உங்கள் ஜட்டியை காயப் போடவும்.
பருத்தி துணியினால் ஆன ஜட்டிகளை விட ஏனைய கலப்பு துணிகளால் செய்யப்பட்ட ஜட்டிகள்(Cotton Blend, Synthetic Fabric, etc) சீக்கிரம் காய்ந்து விடும். அவற்றை சீக்கிரம் துவைத்து சுத்தம் செய்யவும் முடியும். அவற்றில் கறைகள் ஏற்படும் வாய்ப்பும் குறைவு.
அவதானம்: ஜட்டியை நன்கு துவைத்து, அதில் உள்ள சோப்பு நீர், சலவைத் தூள் நீர்/நுரைகள் அகன்று விட்டத்தை உறுதி செய்யவும். ஒழுங்காக அவை அலசப்படா விட்டால், அதன் மூலம் கூட உங்கள் அந்தரங்கப் பகுதியில் ஒவ்வாமை(Skin Irritations) ஏற்படலாம்.
Read More: ஆண்கள் தமது உள்ளாடைகளை பராமரிப்பது எப்படி?
Recommended: ஆண்கள் ஆடைகளை துவைப்பது எப்படி?
Keywords: Men Underwear, Male Underwear, Aangal Jatti
Comments
Post a Comment