இந்து ஆலயங்களுக்குச் செல்லும் போது ஆண்கள் தமது மேலாடையை கழட்டுவது வழமை. சில பழமையான கோயில்கள் அதனை கட்டாயப்படுத்தியிருந்தாலும், அநேகமான கோயில்கள், கோயில்களினுள் நுழையும் போது ஆண்கள் சட்டையை கழட்டுவதை அவர்களின் விருப்பத்திற்கு விட்டு விட்டார்கள்.
Recommended: இந்து ஆலயங்களுக்குச் செல்லும் போது, ஆண்கள் ஏன் மேலாடையை கழட்ட வேண்டும்?
என்ன தான் வேட்டி நமது பாரம்பரிய ஆடையாக இருந்தாலும் இன்றும் பல ஆண்களுக்கு சரியாக வேட்டி கட்டத் தெரியாது. வயது வந்த ஆண்களுக்கு நான்கு முழ வேட்டியை விட எட்டு முழ வேட்டி அணிவதே சிறந்தது.
ஏன் என்றால், ஆண்கள் நான்கு முழ வேட்டி கட்டிக் கொண்டு நடக்கும் போது, அல்லது எட்டு முழ வேட்டியை இரண்டாக மடித்து நான்கு முழ வேட்டி போல கட்டிக் கொண்டு நடக்கும் போது வேட்டி விலகி அவர்களின் தொடைகள் வெளித்தெரிய அதிக வாய்ப்பு உள்ளது. அதே போல வேட்டி காற்றில் பறக்கவும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறான பல விடையங்களைத் தவிர்ப்பதற்காக ஆண்கள் வேட்டி கட்டும் போது அதன் மேல், துண்டு கட்டுவது போல வேட்டியுடன் வரும் சால்வையை அணிவார்கள். ஆனால் அதனை இடுப்பில் அணிந்தால், வேட்டியின் சால்வையை மார்பைப் போர்க்க, தலைப்பாகை அணிய பயன்படுத்த முடியாது.
இவ்வாறான பல பிரச்சனைகளுக்குத் தீர்வாகத் தான், ஆண்களுக்கு கோயில் சால்வைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அது வேட்டியின் நிறத்தில் மாத்திரம் இருக்காது. பல்வேறு வர்ணங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. சில கோயில்கள் அவர்களின் ஆலய விபரங்கள் பதித்த துண்டுகளை தமது அடியார்களுக்கு கொடுப்பதும் உண்டு. சில ஆலயங்கள் சரியான ஆடை அணியாதவர்களுக்கு, கோயில்கள் சால்வைகள் அல்லது மறைப்புகள் வழங்குகின்றன.
ஆண்கள் கோயில் சால்வைகளை தெரிவு செய்யும் போது அவை அவர்களுக்கு அழகாக இருக்குமா என்பதை பார்த்து வாங்க வேண்டும். பட்டு வேலைப்பாடுகள் நிறைந்த சால்வைகளும் உள்ளன.
தனியே பருத்தி துணியில் செய்யப்பட்ட வேட்டி சால்வைகளும் உள்ளன. எப்போதும் நீங்கள் அணியும் வேட்டியின் நிறத்திற்கு Contrast(வேறுபடும் வகையில்) ஆன நிறத்தில் வேட்டியின் சால்வையை அணிவது சிறந்தது.
இவ்வாறான கோயில் சால்வைகளை இடுப்பில் அணிந்தால் அது வேட்டி கட்டும் ஆண்களுக்கு மேலும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கும். அதே நேரம் வேட்டியின் பின் பக்கம் அழுக்கு படிந்து விடுமே என்று யோசிக்காமல், கோயில் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஆலயத்தினுள் எங்கும் இருக்கக் கூடியதாகவும் இருக்கும்.
கோயில் சால்வையை ஆண்கள் இடுப்பில் துண்டு போல கட்டலாம், அல்லது மார்பை மறைக்கவும் பயன்படுத்தலாம்.
கோயில் சால்வைகளில் பல வகைகள் உள்ளன. அவை அவற்றின் அலங்கார வேலைப்பாடுகள், அவற்றின் அளவுகளில் வேறுபடும். சில கோயில் சால்வைகளை தலைப்பாகை கட்டவும் பயன்படுத்தலாம். சிலவற்றை, வேட்டியின் சால்வை போல, வேட்டி கட்டும் போது இடுப்பில் பட்டியாகவும்(Belt) கட்டலாம்.
Comments
Post a Comment